ஒரு மனிதன் ஒரே துணையுடன் பல ஆண்டுகள் திருப்தி அடைய முடியுமா?

ஒரு மனிதன் ஒரே துணையுடன் பல ஆண்டுகள் திருப்தி அடைய முடியுமா?

டாக்டர் டி.காமராஜ், எம்.டி., 

ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நமது கலாசார மந்திரமாக இருந்தாலும், ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்கும் சிக்கலும் சலிப்பும் ஏற்படுகிறது. உடனே விவாகரத்து செய்வதும், இன்னொருவரை மணப்பதும், அந்த நபருடன் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற மனநிலையில் வாழ்வதும் சகஜமாகிவிட்டது. 2 குழந்தைகளைப் பெற்ற நிலையில் தம்பதியரின் மனதில் சில கேள்விகள் எழுகின்றன.
நாம் விரும்பியபடிதான் வாழ்கிறோமா? நம் எதிர்பார்ப்புக்கேற்றபடி நம் துணை இருக்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கு இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. திருமண உறவில் மட்டுமின்றி, வாழ்க்கையின் பல விஷயங்களின் மீதான எதிர்பார்ப்புகளும் நிறைவேறாமல் இருப்பதை 30 &- 35 வயதில் உணர்கிறார்கள். வேலை, பொருளாதார நிலைமை போன்றவற்றில் உண்டாகும் அதிருப்தியை உடனே மாற்றி விட முடிவதில்லை. ஆனால், திருமண வாழ்வில் ஏற்படுகிற அதிருப்தியை, திருமணம் தாண்டிய இன்னொரு உறவின் மூலம் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது.
வாழ்க்கையில் முன்னேற முடியாமைக்கு எது காரணம், எங்கே கோளாறு என ஆராய்வதற்கு பதில், எல்லாவற்றுக்கும் தன் திருமண உறவு சரியில்லாததுதான் காரணம் என ஒரு பொதுவான முடிவுக்கு வருவதும், அதிலிருந்து வெளியே வர, இன்னொரு உறவை ஏற்படுத்திக் கொள்வதும் பரவலாக நடக்கிறது. இத்தகைய உறவுகள் புத்துணர்வைத் தருவதற்குப் பதிலாக புதுசு புதுசாக பிரச்னைகளையே தரும் என்பதை அறியாதவர்கள் அவர்கள்.
love image tamil.PNG

மிருகங்கள் முத்தமிட்டுக் கொள்வதில்லை. திருமண நாள் கொண்டாடுவதில்லை. காதல் என்கிற அழகான உணர்வை மனிதர்களிடம் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், பலருக்கும் அந்த அருமையான உணர்வை அனுபவிக்கக் கொடுத்துவைப்பதில்லை. இருவர் இணைந்து வாழ்வதால் உண்டாகிற லாபங்களையோ, இன்பங்களையோ பார்க்காமல், அதனால் வரும் பிரச்னைகளையும் செலவுகளையும் நினைத்து, திருமண உறவிலிருந்து வெளியே வர நினைக்கிறவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.
இதிலிருந்து மீண்டு வெளியே வருவதும் அப்படியொன்றும் பிரமாத காரியமல்ல. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

20 வயதில் வாழ்க்கை என்பது ஒருவித வேடிக்கையான, விளையாட்டான விஷயமாகத் தெரியும். வயதாக ஆக, அந்த எண்ணம் மாறி, வேலை, குடும்பம், பொறுப்புகளில் மூழ்குவதால் சீரியஸாக மாறும். காலம் கடந்த நிலையில் மறந்து போன அந்த வேடிக்கையை, விளையாட்டைப் புதுப்பிக்க, இன்னொரு உறவைத் தேட வைக்கும். அதைத் தவிர்த்து, தம்பதியருக்குள் சலிப்பை உண்டாக்கும் விஷயங்களை ஆராய்ந்து, அதை சரியாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். 20 வயதிலிருந்த வாழ்க்கை, 50 வயதில் இருக்கப் போவதில்லை. ஆனாலும், 50 வயதில் வெறும் வேலையில் மட்டுமே கவனமாக இல்லாமல், சுவாரஸ்யமான வேறு சில விஷயங்களையும் கண் திறந்து பார்க்க வேண்டும்.
தம்பதியருக்குள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வதில்லை என்கிற மன உறுதி இருந்தால், தடம் மாறத் தோன்றாது. புதிதாக இன்னொரு துணையிடம் சாத்தியப்படுகிற அதே சுவாரஸ்யம் தன் கணவன் அல்லது மனைவியிடமும் சாத்தியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
துணையைப் புகழ்வதிலும் பாராட்டுவதிலும் வஞ்சனையே வேண்டாம். புகழவும் பாராட்டவும் காரணங்களையோ, சந்தர்ப்பங்களையோ எதிர்பார்த்துக் காத்திருக்கவும் தேவையில்லை.

காதலை அடிக்கடி புதுப்பிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ‘ஐ லவ் யூ’ சொல்வதிலிருந்து, அன்பளிப்பு கொடுத்து அசத்துவது வரை இதற்கு எந்தவிதமான டெக்னிக்கையும் பயன்படுத்தலாம்.
அந்தரங்க உறவுக்கும் நெருக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
மேற்சொன்ன வழிகளில் எளிதாக சீரமைக்கக் கூடிய உறவை, பெரும்பாலான தம்பதியர் துணையின் மீது அதீத கோபம், கவனமின்மை, தான் வைத்ததுதான் சட்டம் என்கிற மனநிலை போன்ற எதிர்மறையான வழிகளால் சீரழிக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் Agree to Disagree என்று சொல்வார்கள். அதாவது, துணைக்கு மாறுபட்ட கருத்து இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் வைத்துக் கொள்வது அவரவர் உரிமை. தனக்காக தன் துணையும் மாறிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை மாற்றிக் கொண்டாலே பாதி பிரச்னைகள் குறையும்.
திருமணமான சில வருடங்களில் மனம் மட்டுமில்லை, உடலும் மாற்றம் காண்கிறது. பல தம்பதியரும் அதைக் கவனிப்பதில்லை. குறிப்பாக பெண்கள்… இயல்பான மாற்றங்களினால் ஆண்களை விட பெண்களின் உடல்வாகு சீக்கிரமே மாறிப் போகிறது. அதை அப்படியே அலட்சியப்படுத்தாமல் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள கொஞ்சம் மெனக்கெடலாம். இந்த விதி ஆண்களுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *